கஞ்சா கடத்திய வாலிபர் சிக்கினார்
கம்பத்தில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி :
தேனி மாவட்டம் கம்பம் மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் நிறுத்தினர்.
போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவர்கள் தப்பியோடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். அதில் ஒருவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனையிட்டனர். அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர், கம்பம் நேருஜி தெருவை சேர்ந்த பாண்டீஸ்வரன் (வயது 23) என்றும், தப்பியோடியவர் குரங்குமாயன் தெருவை சேர்ந்த விக்னேஷ் (26) என்றும், கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டீஸ்வரனை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய விக்னேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.