சாலையோரம் நின்றபோது பரிதாபம் லாரி சக்கரங்கள் மோதி ஏ.சி.மெக்கானிக் பலி
போரூர் அருகே தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் சென்று கொண்டிருந்த லாரியின் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடி வந்து ஏ.சி.மெக்கானிக் மீது மோதியதில் பலியானார்.
பூந்தமல்லி,
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் முத்துலிங்கராஜ் (வயது 29). இவர் வண்டலூரை அடுத்த கண்டிகையில் தங்கி ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று மதியம் வேலைக்கு செல்வதற்காக தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் சென்று கொண்டிருந்தார்.
போரூர் அருகே வந்த நிலையில் சாலையின் ஓரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது 8 சக்கரத்துடன் மதுரவாயல் நோக்கி வேகமாக வந்த லாரியின் பின்புறம் இருந்த 2 சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியது. அதில், சாலையோரம் நின்று கொண்டிருந்த முத்துலிங்கராஜ் மீது வேகமாக மோதியதில் நிலை குலைந்து அவர் கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் மயங்கினார்.
இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் முத்துலிங்கராஜை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார். இதுகுறித்து அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும், இறந்து போன முத்துலிங்கராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் ஸ்ரீதர் (30), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாலையில் வேகமாக சென்ற லாரியின் பின் சக்கரங்கள் கழன்று சாலையோரம் நின்ற வாலிபர் மீது மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.