தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும்- மலை கிராம மக்கள் கோரிக்கை

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2021-07-13 22:48 GMT
தாளவாடி
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.  
மலைப்பகுதி 
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் காரணமாக கடந்த 2 மாதங்களாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அரசு வழங்கி பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பஸ்கள் இயங்கின. 
 ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 8 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இவை மலைப்பகுதியில் இருந்து  சத்தியமங்கலம், கோவை, ஈரோடு பகுதிகளுக்கும் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. 
கூடுதல் பஸ்கள்
இந்தநிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கும் அதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கும் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் மலைகிராம மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும் மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து இல்லாததால் தாளவாடியில் இருந்து செல்லும் பஸ்கள் அனைத்தும் தலமலை வழியாக சுற்றி செல்கின்றன. இதனால் பயண நேரமும் அதிகமாகிறது. மேலும் குறைந்த அளவே பஸ்கள் ஓடுவதால் மக்கள் சமூக இடைவெளியை மறந்தும், கூட்ட நெரிசலாகவும் பயணிக்கிறார்கள். இதனால் மீண்டும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே தாளவாடி இருந்து சத்தியமங்கலத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்