கர்நாடகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சொந்த கட்டிடம்; எடியூரப்பா பேச்சு
கர்நாடகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
கல்வி நிதி திட்டம்
கர்நாடக போலீஸ் துறை சார்பில் கல்வி நிதி திட்டம் தொடக்கம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த திட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடக போலீசார் மிக நேர்மையான முறையில் பணியாற்றி வருகிறார்கள். போலீசாரின் குழந்தைகளின் கல்விக்காக கல்வி நிதி திட்ட தொடங்கப்பட்டுள்ளது. ஆரோக்கிய பாக்கிய திட்டத்தில் இருந்த சில குளறுபடிகள் சரிசெய்யப்பட்டுள்ளன. போலீசரின் நல மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிக்காவியில் உள்ள கர்நாடக ஆயுதப்படை பப்ளிக் பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்ற சோதனை பிரிவு
ரூ.6.09 கோடியில் 50 போலீஸ் பஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.25 கோடியில் 10 ஆயிரத்து 32 குடியிருப்புகளை உள்ளடக்கிய குடியிருப்பு வளாகம் கட்டப்படுகிறது. வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக போலீசில் குற்ற சோதனை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
குற்றம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக தடய அறிவியல் அதிகாரிகள் சென்று ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்பது இந்த பிரிவு தொடங்கியதின் நோக்கம் ஆகும். அதனால் இந்த தடய அறிவியல் பிரிவுக்கு புதிதாக 206 பணி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுவர்.
தடய அறிவியல்
முதல் கட்டமாக பெரிய குற்ற சம்பவங்களுக்கு இவர்களின் சேவை பயன்படுத்தப்படும். அதன் பிறகு சிறிய சம்பவங்களிலும் அவர்கள் பணியாற்றுவார்கள். குற்ற தடுப்பு, விரைவாக சோதனை செய்தல் என்பது மிக முக்கியம். கடந்த 2 ஆண்டுகளில் குற்றங்களை தடுப்பதில் நல்ல வெற்றி கிடைத்துள்ளது.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
அதைத்தொடர்ந்து பேசிய போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியதாவது:-
வெளி நாடுகளில் குற்றங்கள் நடந்தவுடன் அங்கு அறிவியல் அறிவு உள்ளவர்கள் உடனடியாக சம்பவத்திற்கு செல்கிறார்கள். அது நமது மாநிலத்திலும் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தடய அறிவியல் பிரிவுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றம் நடைபெற்ற இடத்தில் அதிகளவில் ஆதாரங்களை சேகரிக்க முடியும்.
உள்கட்டமைப்பு வசதிகள்
குற்ற விசாரணையில் அதிகளவில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்படும். கல்வி நிதி திட்டத்தில் சிறப்பாக படிக்கும் போலீசாரின் குழந்தைகளுக்கு அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை உதவி வழங்கப்படும். சுகாதார திட்டத்தில் இருந்த குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. போலீஸ் துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக பஸ்கள், செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள், ஜீப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இந்த விழாவில் 50 பஸ்கள், 140 மோட்டார் சைக்கிள்கள் போலீசாருக்கு வழங்கப்பட்டன. இந்த விழாவில் மூத்த போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.