கரூர் அருகே கோவிலுக்கு சென்ற தம்பதி மீது கார் மோதியதில் பெண் பலி
கரூர் அருகே கோவிலுக்கு சென்ற தம்பதி மீது கார் மோதியதில் மனைவி பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.
வெள்ளியணை
கோவிலுக்கு சென்ற தம்பதி
கரூர் தாந்தோன்றிமலை வசந்தம் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் மனைவி கலாமணியுடன்(55) உப்பிடமங்கலம் அருகே உள்ள முனையனூர் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார்.
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குன்னனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த காரின் டயர் பஞ்சராகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லோகநாதன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பெண் பலி
இதில், மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கலாமணி இறந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.