ஆறு, ஓடைகளில் இருந்து மணல் அள்ளி வந்து குவிப்பு; வெல்டிங் பட்டறை உரிமையாளர் கைது

ஆறு, ஓடைகளில் இருந்து மணல் அள்ளி வந்து குவித்து வைத்தது தொடர்பாக வெல்டிங் பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-13 18:44 GMT
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு(வயது 38). இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு கிராமத்தின் அருகில் சொந்தமாக 10 ஏக்கர் இடம் உள்ளது. அந்த இடத்தில் தற்போது வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் கொள்ளிடம், மருதையாறு மற்றும் அருகில் உள்ள பல்வேறு ஓடைகளில் இருந்து அரசு அனுமதி பெறாமல் எடுத்து வரப்பட்ட சுமார் 80 லோடு மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தேளூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன், கயர்லாபாத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் மணல் குவிக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, மணல் குவித்து வைத்தது தொடர்பாக சேட்டுவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அரசின் அனுமதி பெறாமல் மணல் அள்ளுவதை தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோதிலும், ஒரே இடத்தில் சுமார் 80 லோடு மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்