நவரைப்பட்ட நெல் மூட்டைகள் குறைந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் விற்பனை

தா.பழூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படாததால் நவரைப்பட்ட நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் விற்பனை செய்யும் சூழ்நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2021-07-13 18:34 GMT
தா.பழூர்:

கொள்முதல் செய்யப்படவில்லை
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் காரைகுறிச்சி, வாழைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், கோவிந்தபுத்தூர், சாத்தாம்பாடி, தென்கச்சிபெருமாள்நத்தம், இடங்கண்ணி, சோழமாதேவி, தா.பழூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், வேம்புகுடி ஆகிய ஊராட்சிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நவரை பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அறுவடை நடைபெற்று வரும் சூழ்நிலையில் அறுவடை செய்த நெல்மணிகள் அடங்கிய மூட்டைகளை கொள்முதல் செய்ய டெல்டா பாசன பகுதியான தா.பழூரில் அரசு சார்பில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதனால் கொள்முதல் நிலையங்கள் செயல்படவில்லை.
சம்பா சாகுபடியில் நெல் கொள்முதல் செய்யப்பட்ட இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர்களிடம் கேட்டபோது, விவசாயிகளை தஞ்சை மாவட்டத்தின் நீலத்தநல்லூருக்கோ அல்லது திருப்பனந்தாளுக்கோ சென்று விற்பனை செய்து கொள்ள அறிவுறுத்துவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்தி செய்யப்பட்ட ெநல்மணிகளை லட்சக்கணக்கான மூட்டைகளில், தஞ்சை மாவட்டத்தின் நீலத்தநல்லூர் மற்றும் திருப்பனந்தாள் அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். ஆனால் அங்கு விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.
இடைத்தரகர்களிடம் விற்பனை
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விவசாயிகள், அவர்களின் சொந்த ஊர்களில் குறைந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒரு குவிண்டால் நெல் மூட்டைக்கு ரூ.1,950 வழங்குகிறது. ஆனால் தனியார் இடைத்தரகர்களிடம் விற்பனை செய்யப்படும் நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,350 மட்டுமே கிடைக்கிறது. எனவே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
டெல்டா பாசன பகுதிகளுக்கு உரிய அனைத்து சலுகைகளும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாதது, அலைக்கழிப்புக்கு ஆளாகும் விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கோரிக்கை
தா.பழூர் வட்டாரத்தில் விவசாயிகள் மூன்று போகம் விவசாயம் செய்து வருகின்றனர். வருடத்தின் அனைத்து நாட்களிலும் இப்பகுதியில் நெல் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருவதால் தா.பழூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் நெல் சேமிப்பு கிடங்கு வசதியுடன், நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரியலூர் மாவட்டத்தின் டெல்டா பாசன பகுதியான தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்தது 5 இடங்களில் அனைத்து பருவங்களிலும் கொள்முதல் செய்யும் வகையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்