மையங்களில் விடிய விடிய காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம்

கோவையில் மையங்களில் விடிய விடிய காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-13 18:33 GMT
கோவை

கோவையில் மையங்களில் விடிய விடிய காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 
தடுப்பூசி செலுத்தும் பணி

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் கோவை மாநகராட்சி பகுதியில் ஒரு நாளும், ஊரக பகுதியில் மற்றொரு நாளும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்ததால் கடந்த 1 வாரமாக கோவையில் எங்கும் தடுப்பூசி போடவில்லை. இதையடுத்து சென்னையில் இருந்து 2 கட்டங்களாக 31 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி கோவை வந்ததை தொடர்ந்து  தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 

விடிய விடிய காத்திருந்தனர் 

ஒரே நேரத்தில்  மாநகரம் மற்றும் ஊரக பகுதியில் தடுப்பூசி போடப்பட்டன. மாநகரில் 31 மையங்களிலும் தலா 250 பேர் வீதம் 7,750 பேருக்கும், ஊரக பகுதியில் 30 முகாம்களில் 13,800 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக  இரவு 8 மணி முதல் பல மையங்கள் முன் பொதுமக்கள் விடிய விடிய காத்திருந்தனர். இரவு நேரத்தில் நிலவிய குளிரையும் பொருட் படுத்தாமல் சிலர் அங்கேயே படுத்து தூங்கினர். 

பொதுமக்கள் மறியல் 

குறிப்பாக கல்வீரம்பாளையம், ஆர்.எஸ்.புரம், பீளமேடு, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட மையங்கள் முன் பொதுமக்கள் விடிய, விடிய தடுப்பூசிக்காக காத்துகிடந்தனர். 

பொதுமக்கள் அதிகளவில் அங்கு இருந்ததால் சில இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.பீளமேடு தடுப்பூசி மையத்தில் 250 டோக்கன் வழங்குவதற்கு பதிலாக 150 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. 

ஏமாற்றத்துடன் திரும்பினர் 

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் சமாதானப்படுத்தினர். 

இதேபோல் தடாகம், வீரகேரளம், நஞ்சுண்டாபுரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி கிடைக்காததால் பொதுமக்கள் சுகாதார துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சாலைமறியல் செய்தனர். மேலும் பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக விடிய விடிய காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். 

இது குறித்து சுகாதார துறையினர் கூறியதாவது:-

கூடுதலாக கேட்டு உள்ளோம் 

சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில்தான் பொதுமக்களுக்கு தடுப்பூசி அதிகமாக செலுத்தப்படுகிறது. இதுவரை 10 லட்சம் டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. 

ஒரு வாரத்திற்கு பின் தற்போது 31 ஆயிரம் டோஸ் தடுப்பூசி கோவை வந்து உள்ளது. இதனை அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைத்து பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறோம். 

பொதுமக்கள் தடுப்பூசி கிடைக்காத விரக்தியில் மறியலில் ஈடுபடுகின்றனர். கூடுதல் தடுப்பூசிகள் கேட்டு உள்ளோம். அவை வந்ததும் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்