ஒன்று அல்லது 2 குழந்தைகள் இருந்தால் வாழ்க்கை தரம் உயரும். கலெக்டர் பேச்சு

ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது 2 குழந்தைகள் மட்டும் இருந்தால் அக்குடும்பத்தின் வாழ்க்கை தரம் உயரும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

Update: 2021-07-13 18:14 GMT
வேலூர்

உலக மக்கள் தொகை தினம்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், குடும்ப நல துணை இயக்குனர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசியதாவது:-

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற உணர்வை மக்களிடைய ஏற்படுத்த ஆண்டு தோறும் ஜூலை 11-ந்தேதி உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது உலக மக்கள் தொகை சுமார் 790 கோடியாக உள்ளது. 
அதில், இந்திய மக்கள் தொகை 139 கோடி. தமிழ்நாட்டில் 7 கோடியே 86 லட்சம் மக்கள் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் தற்போது மக்கள் தொகை 15 லட்சத்து 40 ஆயிரமாகும்.
வாழ்க்கை தரம் உயரும்

மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு, உடை பற்றாக்குறை, இருப்பிட நெருக்கடி, மருத்துவ வசதி, வேலையின்மை, குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. ஆண்கள் 25 வயதுக்கு பின்பும், பெண்கள் 21 வயதுக்கு பின்னரும் திருமணம் செய்து கொண்டு ஒன்று அல்லது 2 குழந்தைகள் என்ற அளவில் குடும்பத்தின் அளவை கட்டுப்படுத்தினால் மட்டுமே வாழ்க்கை தரம் உயரும்.
இந்தியாவில் குடும்ப நலத்திட்டத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மக்கள் தொகை கட்டுப்படுத்த தற்காலிக கருத்தடை சாதனங்களை பயன்படுத்தலாம். 

குடும்ப நல சிகிச்சை

மேலும் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை என்ற சுமையை குறைக்க ஆண்கள் எளிய முறையில் நவீன குடும்ப நல சிகிச்சையினை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வீடும், நாடும் நலம் பெற சிறு குடும்பம் அமைப்போம். 

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

முன்னதாக மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்