சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு
பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
பொள்ளாச்சி
பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மாட்டு சந்தை
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை களில் மாட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். கடந்த 2½ ஆண்டு களுக்கு பிறகு கடந்த வாரம் சந்தை செயல்பட தொடங்கியது.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை என்பதால் மாட்டு சந்தை நடைபெற்றது.
ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் மாடுகளை வாங்குவதற்கு அதிகளவு வியாபாரிகளும் வந்திருந்தனர். கொட்டும் மழையிலும் மாடுகளை வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:-
வரத்து அதிகரிப்பு
பொள்ளாச்சியில் இருந்து பெரும்பாலும் கேரளாவுக்கு மாடுகள் இறைச்சி பயன்பாட்டிற்கு தான் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை 21-ந் தேதி கொண்டாடப்படுவதால் சந்தைக்கு அதிகமாக மாடுகள் கொண்டு வரப்பட்டன.
2,500 மாடுகள் வந்திருந்தன. 500 வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர். கடந்த வாரத்தை விட 1,500 மாடுகள் அதிகமாக வந்திருந்தன.
நாட்டு காளை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை, பசுமாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை, நாட்டு எருமை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை, மொரா ரக மாடு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை, செர்சி ரக மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. வரத்து அதிகரித்தும் மாடுகள் விலை குறையவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.