திருச்செங்கோட்டில் கொரோனா தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் திடீர் மறியல்-போலீசார் சமரசம்

திருச்செங்கோடு சீதாராம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்படாத நிலையில், அங்கு வந்த பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-13 17:49 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு சீதாராம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்படாத நிலையில், அங்கு வந்த பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். 
கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கடந்த 10 நாட்களாக தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி சரிவர நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் சீதாராம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று சீதாராம் பாளையம் மற்றும் ராஜா கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக வாட்ஸ்-அப் குழுக்களில் நேற்று முன்தினம் இரவு தகவல் பரவியது. இதையடுத்து இந்த இரு மையங்களிலும் தடுப்பூசி போட பொதுமக்கள் நேற்று காலை முதலே வரத்தொடங்கினர். இதில் ராஜா கவுண்டம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றது.
அதே நேரத்தில் சீதாராம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் குவிவதை பார்த்த அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள் இன்று(நேற்று) தடுப்பூசி இங்கு போடப்படாது என்று கூறினர். சமூக வலைத்தளத்தில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுவதாக தவறான தகவல் பரவியதாக அங்கிருந்த பணியாளர்கள் கூறி உள்ளனர்.
சாலைமறியல்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வலியுறுத்தினர்.
போலீசாரின் வேண்டுகோளை ஏற்று மறியலை கைவிட்டு சாலை ஓரத்தில் வந்து பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 சீதாராம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ராஜா கவுண்டம்பாளையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படுவதாகவும், ஒவ்வொரு பகுதிக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்வதாகவும் போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமார் 10 நிமிடம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டு 110 நாள் ஆகியும், 2-வது டோஸ் தடுப்பூசி போட முடியாமல் தவித்து வருகிறோம். தினமும் இங்கு வந்து தடுப்பூசி போட இயலாமல் திரும்பி செல்கிறோம். தடுப்பூசி போட்டு 48 நாள் கழித்து 2-வது தடுப்பூசி போடப்பட வேண்டும். ஆனால் தடுப்பூசி வராத காரணத்தால் தடுப்பூசி போடப்பட வில்லை. எனவே பகுதி வாரியாக பிரித்து தடுப்பூசி போடப்பட்டால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்