பழங்குடியின கிராமத்திற்கு ரூ.2½ கோடியில் தார்ச்சாலை

கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்திற்கு ரூ.2½ கோடியில் தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2021-07-13 17:48 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே கொணவக்கரை ஊராட்சியில் தாளமொக்கை என்ற பழங்குடியின மக்கள் கிராமம் உள்ளது. இங்கு போதிய சாலை வசதி இல்லாததால் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை தொட்டில் கட்டி சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது.

 இந்த நிலையில் சம்பவத்தன்று 19 வயது இளம்பெண்ணுக்கு 7 மாதத்திலேயே வீட்டில் வைத்து குழந்தை பிறந்தது. தொப்புள் கொடி முழுமையாக வெளியே வராததால் அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகரித்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் தொட்டில் கட்டி, அவரை சிகிச்சைக்கு சுமந்து சென்றனர். 

இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனைத்தொடர்ந்து கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமர் தலைமையில் அதிகாரிகள் உடனடியாக சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் தாளமொக்கை கிராமத்தில் இருந்து செம்மனாரை கிராமம் வரை ரூ.2 கோடியே 50 லட்சத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க முடிவு செய்தனர். 

தொடர்ந்து இதுகுறித்த திட்ட அறிக்கை தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தாளமொக்கை கிராமத்தில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு 67 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஆனால் கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக அந்த பணிகள் தாமதமாகி வந்தன. புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டவுடன், அப்பகுதி மக்களுக்கு தொகுப்பு வீடுகளும் விரைவில் கட்டிக்கொடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்