வாணியம்பாடியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.40 லட்சம் நகைபணம் கொள்ளை

வாணியம்பாடியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.40 லட்சம்மதிப்புள்ள நகை, பணத்தை மர் நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

Update: 2021-07-13 17:43 GMT
வாணியம்பாடி

தனியார் நிறுவன மேலாளர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி முஸ்லிம்பூர் அபூபக்கர் தெருவை சேர்ந்தவர் அதாவுர் ரஹ்மான். சென்னையில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நூரே சபா. இவர் குழந்தைகளுடன் வாணியம்பாடியில் வசித்து வருகிறார். 

நூரே சபாவின் தாய் ஷர்புன்னிசா உடல் நலக்குறைவு காரணமாக பக்கத்து தெருவில் உள்ள உறவினர்கள் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை பார்க்க நேற்று முன்தினம் இரவு சென்ற நூரே சபா அங்கேயே தங்கி உள்ளார்.

ரூ.40 லட்சம் நகை-பணம் திருட்டு

நேற்று மாலை வீடு திரும்பி உள்ளார். வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது வீட்டல் இரண்டு அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததார். அதில் வைத்திருந்த 95 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக நூரே சபா வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி செல்வம் மற்றும் போலீசார் ஆய்வு செய்த போது, வீட்டின் மொட்டை மாடியில் உள்ள இரும்பு கிரீலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.

போலீஸ் சூப்பிரண்டு            விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்தனர். மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து  புதூர், பைபாஸ் ரோடு வழியாக சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஓடி நின்று விட்டது. 

நகை பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை பிடிக்க வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.

பூட்டிய வீட்டின் மாடிவழியாக கம்பியை உடைத்து உள்ளே இறங்கி ரூ.40 லட்சம் நகை- பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்