திருக்கோவிலூர் அருகே விவசாயி வெட்டிக் கொலை
திருக்கோவிலூர் அருகே நிலத்தை பார்த்து வர சென்ற விவசாயியை வெட்டிக் கொலை செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
திருக்கோவிலூர்
விவசாயி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஞானம்பெற்றான்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கோவிந்தன்(வயது 37). விவசாயியான இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை கோவிந்தன் தனது நிலத்தை பார்த்து வர அதேபகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் நிலத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள கரும்பு வயலில் பதுங்கி இருந்த மர்மநபர் ஒருவர் திடீரென கோவிந்தனை வழிமறித்து அரிவாளால் அவரது தலையில் சரமாரியாக வெட்டிவி்ட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பரிதாப சாவு
இதில் தலையில் வெட்டுக்காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட விழுந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்து வந்த கோவிந்தனின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோப்ப நாய்
மேலும் இந்த கொலையில் துப்பு துலக்குவதற்காக மோப்ப நாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து ஓடி கோவிந்தனின் உறவினர் ஒருவர் வீட்டின் முன்பு போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இந்த கொலை சம்பவம் குறித்து கோவிந்தனின் தாய் பெண்ணரசி கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிந்தனை கொலை செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீசார் விசாரணை
கோவிந்தனுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த பிரச்சினையால் கோவிந்தன் வெட்டி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிலத்தை பார்த்து வர சென்ற விவசாயியை மர்மநபர் வெட்டி கொலை செய்த சம்பவம் ஞானம்பெற்றான்தாங்கள் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.