பேரிகை அருகே கணவரை தாக்கி பெண் கடத்தல்
பேரிகை அருகே கணவரை தாக்கி பெண் கடத்தப்பட்டார்.
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள பேரிகையை அடுத்த சிகரலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி முனிரத்னா (வயது 35). கடந்த 11-ந் தேதி இரவு கணவன்-மனைவி 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது காரில் அங்கு வந்த 3 நபர்கள் மணிகண்டனை தாக்கி விட்டு முனிரத்னாவை கடத்தி சென்றனர். பின்னர் அவரை மறுநாள் காலை அவரை சூளகிரி அருகே உள்ள ராமன்தொட்டி பகுதியில் விட்டு சென்றனர். இது குறித்து முனிரத்னா பேரிகை போலீசில் புகார் மனு அளித்தார். அதில் மர்ம நபர்கள் தன்னை கடத்தி சென்று கட்டை, கைகளால் தாக்கினர் என்றும், கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது கணவர், அவருடைய உறவினர்களான சின்னவன், தம்பி ஆகியோருடன் மரம் வெட்டும் வேலைக்கு சென்றபோது, அங்கு பணத்துடன் ஒரு பை இருந்ததாகவும், அந்த பையை கேட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
முனிரத்னா கூறும் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால், அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.