ஜிகா வைரஸ் எதிரொலி: சென்னை விமான நிலையம் வரும் கேரள பயணிகளுக்கு தீவிர பரிசோதனை மாவட்ட கலெக்டர் ஆய்வு

ஜிகா வைரஸ் காரணமாக சென்னை விமான நிலையம் வரும் கேரள பயணிகளுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-07-13 01:09 GMT
ஆலந்தூர், 

தமிழ்நாட்டின் பக்கத்து மாநிலமான கேரளாவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த நோய் தமிழகத்திலும் பரவாமல் இருக்க தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களையும் தமிழக எல்லையில் நிறுத்தி பயணிகளை தொ்மல் ஸ்கேனா் மூலம் பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

அதேபோல் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து ரெயில் பயணிகளுக்கும் தமிழக ரெயில் நிலையங்களில் தொ்மல் ஸ்கேனா்கள் மூலம் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க தொடங்கி உள்ளனா்.

இந்தநிலையில் கேரள மாநிலத்தில் இருந்து சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூா் ஆகிய விமான நிலையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 7 விமானங்கள் வருகின்றன. அதில் தினமும் சுமாா் 200-ல் இருந்து 600 பயணிகள் வரை பயணம் செய்கின்றனா்.

கேரளாவில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதிக்க தமிழக சுகாதாரத்துறையினா் முடிவு செய்தனா். அதன்படி கேரளாவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் கேரள பயணிகளை பரிசோதனை செய்யும் முறைகளை நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆய்வு செய்தார். அப்போது பயணிகளை பரிசோதனை செய்யும் முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜ் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் இருந்தனர்.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலைய வருகை பகுதிக்கு வரும் பயணிகளுக்கு தொ்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்பே வெளியே அனுப்புகின்றனா். அதற்காக செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறையை சேர்ந்த 30 ஊழியா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா்.

கேரள மாநிலத்தில் இருந்து வரும் விமான பயணிகளை மிகவும் கவனமாக தீவிரமாக பரிசோதிக்கபடுகின்றனா். அவர்களது உடல் வெப்பநிலையில் சந்தேகம் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் அவர்கள் எங்கு தங்குகின்றனா்? என்ற விவரங்களை கேட்டறிந்த பின்பே வெளியே அனுப்புகின்றனா். தமிழக சுகாதாரத்துறையிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரை இந்த பரிசோதனை முறை தொடரும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்