மோட்டார் சைக்கிள்கள் மோதல்;தொழிலாளி சாவு
வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வாழப்பாடி
வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கீரைப்பட்டியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 27). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி தாதி (23). இவர்களுக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தாதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு சென்ற மனைவியையும், குழந்தையையும் பார்க்க சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சந்து மலை பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு அஜித்குமார் வந்திருந்தார்.
சாவு
இந்த நிலையில் நேற்று மாலை தனது உறவினருக்கு பெண் பார்க்க புழுதிகுட்டை பகுதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் சந்துமலைக்கு உறவினர் அழகேசன் (36) என்பவருடன் திரும்பினார். புழுதி குட்டை- சந்து மலை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பின்னால் அமர்ந்து வந்த அழகேசன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விசாரணை
இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிறந்த குழந்தையை பார்க்க வந்திருந்த இடத்தில் விபத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.