வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தப்பினர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பி.ராமச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கத்தார் நாட்டில் வேலைபார்த்து வந்தார். தற்போது சொந்த ஊரான பி.ராமச்சந்திராபுரத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 2.30 மணிக்கு தனது குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்குள் கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்தனர். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழுந்திருந்தபோது, கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.
20 பவுன் நகை
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் இது தொடர்பாக வன்னியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வன்னியம்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. விருதுநகரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் வீட்டிலிருந்து அந்தப்பகுதி ஓடை வரை ஓடிச் சென்று நின்றது.
வீட்டில் ஆள் இருக்கும் போது வீட்டுக்குள் புகுந்து நகையை கொள்ளை அடித்து சென்றது பி.ராமச்சந்திரா புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு நமச்சிவாயம் உத்தரவின்பேரில் நகையை திருடி சென்ற கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.