விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கம்
2 மாதங்களுக்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம்,
கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அண்டை மாநிலமான புதுச்சேரி அரசு, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் மாத இறுதியிலேயே பொது போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தமிழக பஸ்களை புதுச்சேரி மாநிலம் வழியாக இயக்கவும் தடை விதித்தது.
இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2 மாதமாக புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் விழுப்புரம் மாவட்ட மக்கள், புதுச்சேரிக்கு செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். ஒரு சிலர் மட்டும் கார், இருசக்கர வாகனங்களில் சென்று வந்தனர்.
180 பஸ்கள்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியுள்ளதையடுத்து, ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி தமிழக பஸ்களை புதுச்சேரி மாநிலத்திற்கு இயக்கலாம் என அரசு அறிவித்தது. அதற்கு அம்மாநில அரசும் அனுமதி அளித்தது.
இதையடுத்து சுமார் 2 மாதங்களுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டன. இதனால் விழுப்புரம் பஸ் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் 180 பஸ்கள் இயக்கப்பட்டன இதையடுத்து பயணிகள் தங்களது சொந்த வேலை உள்பட பல்வேறு காரணங்களுக்காக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பஸ்சில் ஏறி சென்றனர். கொரோனா தொற்று பரவாத வகையில் பயணிகள் முக கவசம் அணிந்து சென்றனர்.
2 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.