கோட்டை சுற்றுச்சுவர் நடைபாதையில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி
கோட்டை சுற்றுச்சுவர் நடைபாதையில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி
வேலூர்
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக வேலூர் கோட்டை கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி மூடப்பட்டது. அதனால் கோட்டை வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், அருங்காட்சியகங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காந்திசிலை அருகே இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார், தொல்லியல்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொற்று பாதிப்பு குறைவு காரணமாக பின்னர் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியத்தை பொதுமக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். கடந்த 6-ந் தேதி முதல் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆனால் கோட்டை சுற்றுச்சுவர் நடைபாதைகளுக்கு செல்லும் இரும்புகேட் பூட்டப்பட்டிருந்தது. அதனால் கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் நேற்று கோட்டை சுற்றுச்சுவர் நடைபாதையில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி நடைபாதையில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை தொல்லியல்துறை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நடைபாதையில் சென்று அகழி மற்றும் கோட்டையின் கட்டிட அமைப்பை கண்டு ரசித்தனர்.