வேலூர் அருகே காணாமல் போன வாலிபர் சுடுகாட்டில் பிணமாக கிடந்தார்
காணாமல் போன வாலிபர் சுடுகாட்டில் பிணமாக கிடந்தார்
வேலூர்
வேலூரை அடுத்த பெரியதெள்ளூரை சேர்ந்தவர் பைரவன் (வயது 32), தொழிலாளி. கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பைரவன் மீண்டும் திரும்பி வரவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரின் பெற்றோர் அரியூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வேலூரை அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அவர் காணாமல் போன பைரவன் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பைரவனின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைரவன் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.