சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் தொடர் மழையால் சாலையில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-07-12 17:17 GMT
வால்பாறை,

வால்பாறையில் தொடர் மழையால் சாலையில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

வால்பாறையில் மழை

வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. நகர் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தவர்கள் குடைபிடித்தப்படி சென்றதை காணமுடிந்தது.

சாலையில் மரம் விழுந்தது

சோலையார் அணைக்கு செல்லும் சாலையில் வரட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் மழையின் காரணமாக நேற்று காலை ராட்சத மரம் முறிந்து விழுந்தது. 

மேலும் மரத்தின் கிளைகள் மின்கம்பிகள் மீது விழுந்ததால், மின்கம்பி அறுந்து வரட்டுப்பாறை, பழைய வால்பாறை பகுதிகளில் மின்தடை எற்பட்டது.
சாலையில் குறுக்கே மரம் விழுந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதன் பின்னர் போக்குவரத்து சீரானது. தொடர்ந்து மின்வாரிய பணியாளர்கள் மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 

சோலையார் அணை நீர்மட்டம் உயர்வு

தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் சின்னக்கல்லார், நீரார் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் சோலையார் அணையின் நீர்ட்டம் 2 அடி உயர்ந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 115 அடியாக இருந்தது. 

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1937 கனஅடி தண்ணீர் வந்தது. சோலையார் அணை மின்நிலையம்-1 இயக்கப்பட்டு மின் உற்பத்திக்கு பின்னர் வினாடிக்கு 409 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கும், சோலையார் மின் நிலையம்-2 இயக்கப்பட்டு வினாடிக்கு 448 கனஅடி தண்ணீர் கேரளாவிற்கும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மழை அளவு

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- வால்பாறை-21, சோலையார் அணை-28, சின்னக்கல்லார்-73, நீரார்-35. மழை பதிவானது. 

மேலும் செய்திகள்