சுடுகாட்டை விரிவுப்படுத்தி தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் மனு
சுடுகாட்டை விரிவுப்படுத்தி தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் மனு
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி காலனியைச் சேர்ந்த மக்கள் ஊர் நாட்டாமை நாகராஜ் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மாடப்பள்ளி காலனியில் 5 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக மாடப்பள்ளி காலனியில் 7 சென்ட் நிலம் சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம். இந்தப் பகுதிகளில் உள்ள ஒருவர் இறந்தால் கூட ஏற்கனவே புதைத்த குழியிலே மீண்டும் மீண்டும் தோண்டி புதைக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
பிணத்தைப் புதைக்கும்போது அந்த இடத்தில் இருந்த பிணத்தின் எலும்புக்கூடுகள் வெளியே வருகின்றன. இந்தச் சுடுகாட்டை பயன்படுத்த மிகவும் சிரமமாக உள்ளது. ஆகையால் சுடுகாட்டை விரிவுப்படுத்தி தர வேண்டும் எனப் பலமுறை அரசுக்கு மனு அளித்தும் இதுவரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
எனவே சுடுகாட்டை விரிவுப்படுத்தி தர வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்ளனர். அவர்களுக்கு விளையாட சிறுவர் பூங்கா அமைத்துத் தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
-----------
Image1 File Name : 5026291.jpg
----
Reporter : S. RAJESHKUMAR Location : Vellore - KANTHILI