கேரளாவில் இருந்து கூடலூருக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கேரளாவில் இருந்து கூடலூருக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Update: 2021-07-12 17:07 GMT
கூடலூர்

கேரளாவில் இருந்து கூடலூருக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இ-பதிவு அமல்

தமிழகத்தில் கடந்த 5-ந் தேதி முதல் பொதுப்போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஆனால் மாநிலங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது. அவசர தேவைகளுக்காக இ-பாஸ் பெற்று தமிழகத்துக்குள் வர அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. 

தற்போது இ-பதிவு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கேரள-கர்நாடக மாநில எல்லைகளில் உள்ளது. அங்கு போலீசார் மற்றும் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஜிகா வைரஸ்

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா மட்டுமின்றி ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இதனால் மாநில எல்லைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. 

இருப்பினும் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து தப்பி இ-பதிவு இல்லாமல் சில வாகனங்கள் கூடலூருக்குள் நுழைந்தது. அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது.

வாகன சோதனை

ஆனால் கடந்த 2 நாட்களாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, தாளூர் மற்றும் கர்நாடக எல்லையான கக்கநல்லா உள்ளிட்ட அனைத்து சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர். 

அப்போது பெரும்பாலான வாகனங்களில் இ-பதிவு வைத்திருந்தாலும் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆவணங்கள் வைத்திருப்பதில்லை. இதனால் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத பெரும்பாலான வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மேலும் செய்திகள்