போதைக்கு அடிமையாகி தடம் மாறும் வாலிபர்கள்

போதைக்கு அடிமையாகி தடம் மாறும் வாலிபர்கள்

Update: 2021-07-12 17:02 GMT
புதுக்கோட்டை, ஜூலை.13-
புதுக்கோட்டையில் மீண்டும் போதை ஊசி விற்பனை தொடங்கி உள்ளது. போதைக்கு அடிமையாகி தடம் மாறி வாலிபர்கள் செல்கின்றனர். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என போலீசார் எச்சரிக்கை விடுவிக்கின்றனர்.
போதை ஊசி
புதுக்கோட்டையில் கடந்த சிலகாலமாக போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருகிறது. வாலிபர்கள் பலர் தடம் மாறி போதை ஊசிக்கு அடிமையாகி உள்ளனர். போதை தரக்கூடிய மாத்திரைகளை வாங்கி அதனை பொடியாக்கி, தண்ணீரில் கலந்து ஊசி மூலம் நரம்பில் ஏற்றுகின்றனர். இது உடலில் நேரடியாக கலக்கும் போது அவர்களுக்கு போதை தலைக்கேறுகிறது.
மேலும் பல மணி நேரம் இந்த போதை உடலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போதை ஊசி ரூ.100 முதல் விற்கப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. டாஸ்மாக் கடையில் மதுப்பாட்டில் வாங்கி மது அருந்தும் பழக்கம் உடையவர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை போல போதை ஊசிக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதை ஊசி விற்கும் கும்பலின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
2 பேர் கைது
போதை ஊசி விற்கும் கும்பலை போலீசார் சில மாதங்களுக்கு முன்பு களையெடுத்து வந்தனர். மேலும் இதில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை நகரப்பகுதியில் போதை ஊசி விற்பனை மீண்டும் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் பகுதியில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  இந்த நிலையில் கணேஷ் நகர் போலீசார் ரோந்து பணியின் போது மச்சுவாடி பகுதியில் போதை ஊசி விற்ற கும்பலை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பியோடினார். போதை ஊசி பயன்படுத்தியதாக மணி கிருஷ்ணன் (வயது23), விஜயன் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர். பக்கத்து மாவட்டங்களில் இருந்து மாத்திரைகளை வாங்கி வந்து புதுக்கோட்டையில் விற்பதாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உயிருக்கு ஆபத்து
போதை ஊசி பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என போலீசார், மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நரம்பில் நேரடியாக ஊசி மூலம் போதை மருந்து செலுத்தப்படுவதால் பக்க விளைவுகள் ஏற்படும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்