கோழித்தீவனங்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோழித்தீவனங்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம்
பல்லடத்தில், கோழித்தீவனங்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோழித்தீவன விலை உயர்வு
பல்லடம் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கோழி தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பண்ணையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கால் விற்பனை பாதிப்பு
இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி பண்ணையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் பண்ணைதொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், சோளம், ராகி, பயிரிடும் விவசாயிகள், கறிக்கோழி பண்ணை அமைக்கும் தொழிலாளர்கள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும், பல லட்சம்பேர் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டதன் காரணமாக கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு விற்பனை பழைய நிலைக்கு திரும்பும் நிலையில் எதிர்பாராத விதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கறிக்கோழி தீவனங்கள் விலை அதிகரித்து வருகிறது. கிலோ ரூ.14 ஆக இருந்த மக்காச்சோளம் ரூ.24 ஆகவும், ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கு தற்போது ரூ.75 ஆகவும், ரூ.60 ஆக இருந்த தாவர எண்ணெய் ரூ.110 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்
லாரி வாடகை, ஆள் கூலி உள்ளிட்டவை 10 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. மேலும் தீவனங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலை அதிகரிக்கிறது. எனவே தீவன ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கோழி தீவனங்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான மக்காசோளம், கம்பு மற்றும் சோயா ஆகியவற்றை வெளி மாநிலங்களை நம்பியே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது.
எனவே தமிழகத்தில் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரெயில்கள் மூலம் கொண்டு வரும் கோழி தீவனப்பொருட்களுக்கு மத்திய அரசு ரெயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சோயா இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து சோயா இறக்குமதியை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.