அரசு பஸ்களின் ஆயுட்காலம் 9 ஆண்டுகளாக அதிகரிப்பு அரசாணை வெளியீடு

அரசு பஸ்களின் ஆயுட்காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 9 ஆண்டுகளாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-12 13:22 GMT
சென்னை,

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்களின் ஆயுட்காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. அதேபோல் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் ஆயுட்காலம் 3 ஆண்டுகளாக இருந்தது. தமிழகத்தில் தற்போது புதிய சாலைகள் போடப்பட்டு, சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பம், வடிவமைப்பு கொண்ட பஸ்களும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அரசு பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்களின் ஆயுட்காலத்தையும், அதனை கண்டம் செய்யும் ஆண்டுகளையும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு

இதுதொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அரசு பஸ்களின் ஆயுட்காலம் ஏற்கனவே 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்தது. இது, இனிவரும் காலங்களில் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்தது. இனிவரும் காலங்களில் இதனை 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய அரசாணை வெளியிட்டதன் மூலம் ஏற்கனவே இருந்த ஆயுட்காலத்தோடு ஒப்பிடுகையில் அரசு பஸ்களுக்கு 3 ஆண்டுகளும், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கு 4 ஆண்டுகளும் ஆயுட்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்