மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை; ஆணையாளர் சாருஸ்ரீ எச்சரிக்கை
தூத்துக்குடியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குடிநீர்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேவையான குடிநீர் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து பகிர்மான குழாய்கள் மூலம் மாநகரில் உள்ள 30 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கொண்டுவரப்படுகிறது.
அதன் மூலம் மாநகர பகுதிகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் வினியோக நேரங்களில் மாநகராட்சி பணியாளர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மாநகரில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நீர்க்கசிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
பாதிப்பு
மேலும் குடிநீர் வினியோகம் வெகுவாக பாதிக்கப்படுவதற்கான காரணங்களை ஆய்வு செய்தபோது, மாநகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை மின்மோட்டார் மூலம் நேரடியாக உறிஞ்சும் முறையற்ற செயலில் பெரும்பாலானவர்கள் ஈடுபட்டு வருவது தெரியவந்து உள்ளது. இதனால் நீர் அழுத்தம் ஏற்பட்டு குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கடைசி பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில் இடையூறு ஏற்படுவதுடன், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த உடைப்பை சரி செய்வதற்கு மாநகராட்சிக்கு தேவையற்ற செலவினம் ஏற்படுகிறது.
நடவடிக்கை
எனவே இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்கும் விதமாக மாநகராட்சியால் வழங்கப்பட்டு உள்ள குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி உள்ள நபர்கள், உடனடியாக மின்மோட்டாரை அகற்ற வேண்டும். குடிநீர் வினியோக நேரங்களில் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் நேரடி ஆய்வின் போது, மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால், மாநகராட்சி குடிநீர் இணைப்பு விதிகளின்படி குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மோட்டார் பறிமுதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வீட்டு உபயோக இணைப்புகளுக்கு ரூ.15 ஆயிரத்து 400-ம், வணிக உபயோக இணைப்புகளுக்கு ரூ.21 ஆயிரத்து 800-ம் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.