கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை; கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடந்தது
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தளர்வு
ஈரோடு மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெரிய தேவாலயங்கள், 500-க்கும் மேற்பட்ட சிறிய தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு கூடங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட முடியாமல் இருந்தனர். அவர்கள் தங்களது வீடுகளிலேயே பிரார்த்தனை செய்து வந்தனர். குருமார்கள் மட்டும் தினமும் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து மத ஆலயங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள்.
சிறப்பு பிரார்த்தனை
பொதுவாக கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி, கூட்டு பிரார்த்தனை என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். கொரோனா ஊரடங்குக்கு தளர்வுக்கு பின் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு வழிபாடு நடத்த அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் முன் ஏற்பாடுகள் நடந்தது. நேற்று காலை 6 மணி முதல் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.
மேலும், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர், தண்ணீர், சோப்பு போன்றவைகளும் வைக்கப்பட்டு இருந்தன. முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. பிரார்த்தனைக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலையை அறிந்து கொள்ள தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்பட்டது. ஈரோடு பிரப் நினைவு தேவாலயத்தில் கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.