சத்தியமங்கலத்தில் சினிமா பாணியில் பரபரப்பு சோதனை சாவடி தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்ற கார்; போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
சத்தியமங்கலத்தில் சினிமா பட பாணியில் போலீசாரின் வாகன சோதனையில் தடுப்புகளை உடைத்துவிட்டு சென்ற காரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் சினிமா பட பாணியில் போலீசாரின் வாகன சோதனையில் தடுப்புகளை உடைத்துவிட்டு சென்ற காரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
வாகன தணிக்கை
சத்தியமங்கலம் நால்ரோடு பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சத்தியமங்கலம் நோக்கி வந்த ஒரு காரை போலீஸ்காரர் ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றார். அந்த கார் நிற்காமல் போலீஸ்காரர் மீது மோதுவதுபோல் வேகமாக சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சத்தியமங்கலத்தில் மற்ற பகுதிகளில் வாகன தணிக்கை மற்றும் ரோந்து சுற்றி வரும் போலீசாரை உஷார் படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த காரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.
தடுப்புகள் உடைப்பு
சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் என 3 குழுக்களாக பிரிந்து பல இடங்களில் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட கார் போல் உடைய அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வாகன சோதனையில் நிற்காமல் சென்ற காரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே நேற்று அதிகாலை 2 மணி அளவில் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது சந்தேகத்துக்கு உள்ளான அதே கார் அந்த வழியாக வந்தது. போலீசாரை பார்த்ததும், கார் டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டி வந்து தடுப்புகளை உடைத்துவிட்டு சென்றார்.
போலீஸ் விசாரணை
சினிமா பட பாணியில் சோதனை சாவடி தடுப்புகளை கார் இடித்துவிட்டு வேகமாக சென்ற சம்பவத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அங்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
வாகன சோதனையில் நிற்காமல் சென்ற கார் யாருடையது? அவர்கள் ஏன் நிற்காமல் சென்றார்கள்? மது, போதை பொருட்கள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த கார் சென்ற வழித்தடங்களில் பதிவான கண்காணிப்பு கேமராக்களின் வீடியோக்களையும் போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள்.