கர்நாடகத்தின் புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவி ஏற்றார்
பெங்களூரு ராஜ்பவனில் நேற்று நடந்த விழாவில் கர்நாடக மாநிலத்தின் 19-வது கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு முன்னாள் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி எடியூரப்பா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பெங்களூரு:பெங்களூரு ராஜ்பவனில் நேற்று நடந்த விழாவில் கர்நாடக மாநிலத்தின் 19-வது கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு முன்னாள் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி எடியூரப்பா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய கவர்னர் நியமனம்
கர்நாடக மாநில கவர்னராக பதவி வகித்து வந்தவர் வஜூபாய் வாலா (வயது 83). கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் கர்நாடக கவர்னராக பதவி ஏற்றார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்து ஓய்வு பெற இருந்தார். ஆனால் வஜூபாய் வாலா ஓய்வு பெறவில்லை. தொடர்ந்து கவர்னர் பதவியில் வஜூபாய் வாலா நீட்டித்து வந்தார். அவரை மாற்றுவது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி கர்நாடக மாநிலத்தின் கவர்னராக இருந்த வஜூபாய் வாலா மாற்றப்பட்டு, புதிய கவர்னராக மத்திய மந்திரியாக இருந்த தாவர்சந்த் கெலாட்டை நியமித்து ஜனாதிபதி மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, பிரதமர் மோடியின் மத்திய மந்திரிசபையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மந்திரியாக இருந்த தாவர்சந்த் கெலாட், அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜ்பவனில் ஏற்பாடுகள்
அத்துடன், மாநிலங்களவை எம்.பி. பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, கர்நாடக மாநில கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கர்நாடக மாநில புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட், வருகிற 11-ந் தேதி (அதாவது நேற்று) பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெங்களூரு ராஜ்பவனில் உள்ள அதிகாரிகள் செய்து வந்தனர்.
கவர்னர் பதவி ஏற்பதற்காக டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் மதியம் தாவர்சந்த் கெலாட் பெங்களூருவுக்கு வருகை தந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் ராஜ்பவனிலேயே தனது குடும்பத்துடன் தங்கினார். இதையடுத்து, நேற்று காலையில் 10.30 மணியளவில் புதிய கவர்னரின் பதவி ஏற்பு விழா நடைெபற்றது.
தாவர்சந்த் கெலாட் பதவி ஏற்பு
பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் இந்த விழா நடைபெற்றது. கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியான ஏ.எஸ்.ஓகா, புதிய கவர்னரான தாவர்சந்த் கெலாட்டுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வந்தார். அதன்படி, கர்நாடக மாநிலத்தின் 19-வது புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் இந்தி மொழியில் பேசியபடி பதவி ஏற்றார். கடவுள் பெயரில் அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.
இந்த பதவி ஏற்பு விழாவில் முன்னாள் கவர்னர் வஜூபாய், வாலா, முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர். அவர்கள், புதிய கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். கொரோனா காரணமாக முக்கிய நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. கொரோனா விதிமுறைகளின்படியே பதவி ஏற்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்தது.
விடைபெற்றார் வஜூபாய் வாலா
இந்த பதவி ஏற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, துணை முதல்-மந்திரிகளான கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், மந்திரிகளான பசவராஜ் பொம்மை, ஈசுவரப்பா, ஆர்.அசோக், சுரேஷ்குமார், சோமண்ணா, சோமசேகர், யோகேஷ்வர், முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா, தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
அதுபோல், கர்நாடக மாநிலத்தில் 6½ ஆண்டுகளுக்கும் மேலாக கவர்னராக இருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த வஜூபாய் வாலா நேற்றுடன விடைபெற்றார். அவருக்கு முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்
கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக பதவி ஏற்றுள்ள தாவர்சந்த் கெலாட், கடந்த 1948-ம் ஆண்டு மே 18-ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையன் அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர் ஆவார். அவர் பி.ஏ. படித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முதலில் தன்னை இணைத்து கொண்டு இருந்த அவர், அதன் கொள்கையை பின்பற்றுவதில் தீவிரமாக இருந்தார். கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டு வரை சாஜாபுரா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.
2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் சாஜாபுரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். 2012-ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் மத்திய மந்திரியாக இருந்த அவர் தற்போது கர்நாடக மாநிலத்தின் 19-வது கவர்னராக பதவி ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.