அலாரம் ஒலித்ததால் வங்கிக்கு வந்த பெண் அதிகாரியுடன் தகராறு செய்த 3 பேர் கைது கொள்ளையடிக்க முயன்றனரா?
அலாரம் ஒலித்ததால் வங்கிக்கு வந்த பெண் அதிகாரியுடன் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 59). இவர், அமைந்தகரையில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வங்கியில் இருந்து திடீரென அலாரம் ஒலித்தது. இதுதொடர்பாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.
உடனடியாக அவர், பெண் உதவி மேலாளரான ஹிமான்சியிடம் தகவல் தெரிவித்து வங்கிக்கு சென்று பார்க்கும்படி கூறினார். அவரும், வங்கி அமைந்துள்ள கட்டிட உரிமையாளருடன் வங்கிக்கு சென்று பார்த்தார்.
அப்போது அங்கு போதையில் இருந்த 3 மர்மநபர்கள், வங்கி பெண் அதிகாரியான ஹிமான்சியுடன் தகராறு செய்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுபற்றி வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் அமைந்தகரையை சேர்ந்த அரவிந்த் (24), ஸ்ரீராம் (21) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குடிபோதையில் இருந்த அவர்கள், வங்கியில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.