பஸ்சில் முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை

கூடுதல் பயணிகளை ஏற்றி வந்த பஸ்சில் முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கலெக்டர் அலுவலகம் அருகில் சுகாதாரத்துறை ஊழியர்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-11 19:31 GMT
சேலம்,
கூடுதல் பயணிகளை ஏற்றி வந்த பஸ்சில் முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கலெக்டர் அலுவலகம் அருகில் சுகாதாரத்துறை ஊழியர்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கு அனுமதி
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி 50 சதவீத பயணிகள் மட்டுமே பஸ்சில் பயணம் செய்ய வேண்டும். முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சில பஸ்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்வதாகவும், அதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா பரிசோதனை
இந்த நிலையில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சமூக இடைவெளி இல்லாமல் அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த டவுன் பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் பஸ்சில் ஏறி முககவசம் அணியாமல் வந்த பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
வாக்குவாதம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தொற்று பரவாமல் தடுக்க குறைந்த பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மாறாக இவ்வளவு கூட்டமாக பஸ்சில் பயணம் செய்தால் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் முககவசம் அணியாமல் யாரும் பஸ்சில் பயணம் செய்யக்கூடாது.
அரசு கூறியுள்ள விதிகளை பின்பற்றாமல் இவ்வளவு கூட்டமாக பயணம் செய்வதால்தான் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டிய உள்ளது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும் கூடுதல் பயணிகளை ஏற்றக்கூடாது என டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தினர். அதன்பிறகு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்