மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மதுவில் விஷம் கொடுத்து கொன்றேன்; கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்

கரூரில் வாலிபர் சாவில் திடீர் திருப்பமாக மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மதுவில் விஷம் கொடுத்து கொன்றேன் என கைதான அவரது நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2021-07-11 18:56 GMT
கரூர்
மதுகுடித்த நண்பர்கள் 
கரூர் காந்திகிராமம் பெரியார் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (28). இவர்கள், தங்களது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் கரூர் தொழிற்பேட்டை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு கிளி பிடிப்பதற்காக சென்றுள்ளனர். 
இதையடுத்து மோகன் மற்றும் சசிகுமார் வேண்டுகோளின்படி அவர்களுக்கு நண்பர் ஒருவர் மது வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து மோகன் பிராந்தியும், சசிகுமார் பீரையும் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் மோகன் வயிறு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார், சசிகுமார் அதிகமாக வாந்தி எடுத்துள்ளார். 
வாலிபர் சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மோகன், சசிகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மோகன் பரிதாபமாக இறந்தார். சசிகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 பாலியல் தொல்லை
இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் மது வாங்கி கொடுத்த மோகனின் நண்பரான கரூர் தொழிற்பேட்டையை சேர்ந்தவர் தர்மன் (23) என்பவரை பிடித்து கரூர் பசுபதிபாளையம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர் கூறுகையில், எனக்கு மோகன் நீண்ட கால நண்பர். அதனால் அவர் எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். இந்த பழக்கத்தில் மோகன் எனது மனைவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
கொலை செய்ய திட்டம்
இதனால் ஆத்திரமடைந்து மோகனை கொலை செய்ய திட்டம் தீட்டி வைத்திருந்தேன். அதற்கு தகுந்தாற்போல் கடந்த 10-ந்தேதி மோகன் என்னுடன் கிளி பிடிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு வந்தார். அப்போது மது குடிக்க வேண்டும் என நண்பர்களிடம் கூறினார். இதையடுத்து நான் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கினேன். 
 பின்னர் மோகன் மீது உள்ள ஆத்திரத்தில் பிராந்தி மற்றும் பீரில் விஷத்தை (ஆசிட்) கலந்தேன். பின்னர் அதனை கொண்டு வந்து மோகனிடம் கொடுத்தேன். அவரும் அதனை குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.
கைது 
இதையடுத்து பசுபதிபாளையம் போலீசார் தர்மன் கூறியதை வாக்குமூலமாக பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.  மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நண்பரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்