கொடைக்கானல் அருகே விவசாயி வீட்டை சேதப்படுத்திய ஒற்றை யானை
கொடைக்கானல் அருகே விவசாயி வீட்டை ஒற்றை யானை சேதப்படுத்தியது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை, அஞ்சுவீடு, புலியூர், கோம்பை, கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்த ஒற்றையானை கடந்த ஒரு மாதகாலமாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அத்துடன் பொதுமக்களையும் தாக்கி வருகிறது. கடந்த வாரம் அஞ்சூரான் மந்தை பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த தந்தை, மகளை இந்த யானை விரட்டியது. இதில் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை பிலாக்கு பகுதிக்கு வந்த ஒற்றை யானை அங்கு வசித்து வந்த ராஜாஜி என்ற விவசாயியின் வீட்டை சேதப்படுத்தியது. மேலும் அந்த யானை வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த உணவுப்பொருட்களை தின்றது. இந்த சமயத்தில் ராஜாஜி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததால் அவர்கள் உயிர்தப்பினர். னவே மலைப்பகுதியில் தனியாக சுற்றி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.