கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

செஞ்சி அருகே கல் விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-07-11 18:43 GMT
செஞ்சி, 

செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் கல்குவாரி உள்ளது. நேற்று முன்தினம் மாலை இங்கு வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டது. அப்போது கல்குவாரியில் இருந்து கற்கள் சிதறின. அந்த சமயத்தில் 500 மீட்டர் தொலையில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊரணி தாங்கல் கிராமத்தை சேர்ந்த சேகர் மனைவி செல்வியின்(வயது 45) தலையில் கல் விழுந்தது. இதில் தலை நசுங்கி செல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். 
 இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்தநிலையில் கல்குவாரியை மூடக்கோரியும், கல்குவாரி உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் விபத்தில் இறந்த செல்வியின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்க கோரியும் செல்வியின் உறவினர்கள் மற்றும் ஊரணித்தாங்கல் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அங்குள்ள செஞ்சி -திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டனர்.

பேச்சுவார்த்தை

 பின்னர் அவர்கள்  சாலையின் குறுக்கே கட்டைகள் மற்றும் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சிவக்குமார் எம்.எல்.ஏ., தாசில்தார் ராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன,  இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கனல் பெருமாள் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதனிடையே சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கல்குவாரி உரிமையாளர் மீது  நடவடிக்கை எடுப்பதாகவும், இறந்துபோன செல்வியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 2½ மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். 

மேலும் செய்திகள்