திட்டக்குடியில் கோவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த 7 கட்டிடங்கள் இடித்து அகற்றம் 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திட்டக்குடி கோவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த 7 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. அப்போது 2 பெண்கள் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி,
திட்டக்குடியில் பிரசித்திப்பெற்ற அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே திருக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் வடக்கு புறத்தில் 13 பேர் ஆக்கிரமிப்பு செய்து, வீடு மற்றும் கடை உள்ளிட்ட கட்டிடங்களை கட்டி வசித்து வருகிறார்கள். அதாவது 7 கட்டிடங்களில் 13 கடைகள், 2 வீடுகள், ஒரு தனியார் மருத்துவமனை ஆகியன இருந்தது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாயவேல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், திருக்குள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.
அதன்பேரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கடந்த 6-ந்தேதி பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலஅவகாசம் வழங்க கோரியும் ஆக்கிரமிப்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அன்றைய தினம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு வழங்கினர். அதன்பேரில், அவர்கள் தங்களது உடைமைகளுடன் அங்கிருந்து வெளியேறினர்.
நேற்று காலை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.
அந்த சமயத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
இடித்து அகற்றம்
பின்னர், ஆக்கிரமிப்பாளர்களிடம் அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் பரணிதரன், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், தாசில்தார் தமிழ்ச்செல்வி, கோவில் செயல் அலுவலர் சின்ஷா, தாக்கார் லட்சுமி நாராயணன், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில் செயல் அலுவலர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் 7 கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. தொடர்ந்து இன்றும் இப்பணிகள் நடைபெற உள்ளது.
பக்தர்கள் வரவேற்பு
பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக இருந்த திருக்குள ஆக்கிரமிப்புகளை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றியது, பக்தர்கள் மத்தியில் வரவேற்பே பெற்றுள்ளது.
இதற்கிடையே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கொரோனா தடையை மீறி ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 15 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்கப்பதிவு செய்தனர்.