கூடலூர் பஸ் நிலையத்தில் கழிப்பறைகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி

கூடலூர் பஸ் நிலையத்தில் கழிப்பறைகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-07-11 17:34 GMT
கூடலூர்

கூடலூர் பஸ் நிலையத்தில் கழிப்பறைகள்  இல்லாததால்  பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

கூடலூர் பஸ்நிலையம் 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பொது போக்குவரத்து நடைபெறவில்லை. இதன் காரணமாக பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர். 

தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

கேரளா, கர்நாடகா, தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் பஸ் நிலையம் அமைந்து உள்ளது. கடந்த 2 மாதங்களாக பஸ் போக்குவரத்து இல்லாததால் பயணிகள் இன்றி கூடலூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. 

கழிப்பறை வசதி இல்லை 

தற்போது பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதிகள் இல்லை. இது குறித்து இங்கு வந்து செல்லும் பயணிகள் கூறியதாவது:-

இங்குள்ள பஸ் நிலையத்தில் கழிப்பறைகள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் அவை மூடப்பட்டுவிட்டது. பஸ் நிலையத்தின் அருகே நகராட்சிக்கு சொந்தமான கழிப்பறைகளும் ஊரடங்கு காலத்துக்குப் பிறகு திறக்கப்படவில்லை.

மாற்று ஏற்பாடு 

இதனால் இந்த பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் கடுமையாக அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 

இதனால் பஸ்நிலை யத்துக்கு அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கழிவறைகளை திறக்க வேண்டும். இல்லை என்றால் மாற்று ஏற்பாடாக பஸ்நிலையத்தில் தற்காலிக கழிப்பறைகளை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்