திட்டக்குடி பகுதியில் இருந்து சேலத்திற்கு 7¼ டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி 2 பேர் கைது

திட்டக்குடி பகுதியில் இருந்து சேலத்திற்கு 7¼ டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 2 பேரை மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-11 17:32 GMT
கடலூர், 


திட்டக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்து வருவதாக மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல்
 குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


அதன்பேரில் நேற்று மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்பனா, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டுகள் மணிமாறன், திருநாவுக்கரசு மற்றும் போலீசார் திட்டக்குடி கொரக்கவாடி மெயின்ரோட்டில் வாகன சோதனை செய்தனர்.


7¼ டன் ரேஷன் அரிசி

அப்போது, அங்குள்ள ஒரு வீட்டு முன்பு நீண்ட நேரமாக சரக்கு வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் 2 பேர் இருந்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 70 கிலோ கொண்ட 102 மூட்டைகளில் 7 ஆயிரத்து 140 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. 

அதாவது மொத்தம் 7¼ டன் ஆகும். இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே ஊரை சேர்ந்த பச்சமுத்து மகன் கருப்பையா (வயது 25), சுப்பிரமணியன் மகன் பன்னீர்செல்வம் (28) என்று தெரிந்தது.


கைது

இவர்கள் 2 பேரும் கொரக்கவாடி, கீழ்கல்பூண்டி, பனையாந்தூர் மற்றும் லட்சுமணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை கோழி தீவனத்திற்காக சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இவர்களுக்கு உடந்தையாக மேலும் ஒருவர் ஈடுபட்டது தெரிய வந்தது.


இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7¼ டன் அரிசி, சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்