குண்டும் குழியுமாக கிடக்கும் கூடலூர் மைசூரு சாலை
கூடலூர் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
கூடலூர்
கூடலூர் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
கூடலூர்-மைசூரு சாலை
கூடலூரில் இருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கேரளா, கர்நாடகா, தமிழகம் என 3 மாநிலங்களை இணைக்கும் சாலையாக விளங்குகிறது.
இதுதவிர கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநில மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் ஏராளமாக கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் கூடலூர் பகுதி மக்களுக்கும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக கொரோனா பரவலால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனால் வெளி மாநில அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆனால் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள், லாரிகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
குண்டும் குழியுமாக கிடக்கிறது
இந்த நிலையில் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் தொரப்பள்ளி, முதுமலை கார்குடி உள்பட பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.
கூடலூர் பகுதியில் பருவமழை காலம் தொடங்கி உள்ளதால் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
இதனால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாத அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால் அதற்குள் வாகனங்கள் இறங்கும் போது அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
சீரமைக்க கோரிக்கை
இந்த சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களையும் இயக்க முடிவதில்லை. இதனால் கூடலூர், மசினகுடி பகுதியில் மலைவாழ் மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக இருக்கும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.