திண்டுக்கல்லில் அமேசான் காடு போல் மாறிய பூங்காக்கள்

திண்டுக்கல்லில், அமேசான் காடு போல் பூங்காக்கள் மாறியுள்ளன. பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2021-07-11 14:40 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில், அமேசான் காடு போல் பூங்காக்கள் மாறியுள்ளன. பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள், வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு கடைகள், மார்க்கெட்டுகள், டீக்கடைகள், ஓட்டல்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் பூங்காக்கள் செயல்பட தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதே மூடப்பட்ட பூங்காக்கள் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் திண்டுக்கல்லில் உள்ள பெரும்பாலான பூங்காக்கள் சிதிலமடைந்து செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது.
அமேசான் காடு போல்...
அதிலும் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள குமரன் பூங்கா அமேசான் காடு போல் காட்சியளிக்கிறது. பூங்காவுக்குள் செடி-கொடிகள் புதர்போல் வளர்ந்துள்ளதால் யாரும் உள்ளே செல்ல முடியாத நிலையில் உள்ளது. 
இதேபோல் மாநகராட்சி 14-வது வார்டு விவேகானந்தா நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவுக்குள் நவீன மின்விளக்குகள், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், நீரூற்று உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன. பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காக பேவர் பிளாக் கற்கள் மூலம் பூங்காவில் நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால் பூங்காவை திறப்பதற்குள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் தற்போது வரை அந்த பூங்கா திறப்பு விழா காணாமலேயே உள்ளது. 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்காக ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால் தற்போது வரை திறக்கப்படவில்லை. பூங்கா பூட்டியே கிடந்ததால் அதன் பொலிவு மங்கியது. மேலும் பூங்காவுக்குள் செடி-கொடிகள் வளர்ந்து காடு போல் மாறியுள்ளது. ஊரடங்கு காரணமாக திண்டுக்கல்லில் உள்ள பூங்காக்களை திறக்காவிட்டாலும் பராமரிப்பு பணிகளையாவது அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்