குறையும் கொப்பரை விலை
கொப்பரை விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும் அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது.
போடிப்பட்டி
கொப்பரை விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும் அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது.
கூடுதல் வருவாய்
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் உள்ளது. இதன்மூலம் தேங்காய், இளநீர் போன்றவற்றை விற்பனை செய்து விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகிறார்கள். அதேநேரத்தில் தேங்காயை மதிப்புக்கூட்டி கொப்பரையாக விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது தேங்காய் விலை தொடர்ந்து குறைந்து வருவதுடன் கொப்பரை விலையும் குறைந்து வருவது தென்னை விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் கொப்பரை விலை தொடர்ந்து சரிவைச்சந்திப்பதைத் தடுக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் நோக்கத்திலும் அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து கொப்பரை கொள்முதல் மையங்களை திறந்துள்ளது.
ஆர்வம் காட்டாத விவசாயிகள்
அந்தவகையில் உடுமலை, பெதப்பம்பட்டி பகுதிகளிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தற்போது கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொப்பரையை கொள்முதல் மையங்களில் விற்பனை செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக இங்கு கொப்பரை கொள்முதல் மையம் திறக்கப்பட்ட போதிலும் விவசாயிகள் விற்பனை செய்ய முன்வராததால் ஒரு கிலோ கூட கொள்முதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் செலவு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
வெளிச்சந்தையில் ஒருகிலோ கொப்பரை ரூ.109 வரை விற்பனையான போது அரசு ஆதார விலையாக ஒரு கிலோவுக்கு ரூ.103 நிர்ணயித்து கொள்முதல் செய்ய கொப்பரை கொள்முதல் மையங்களைத் திறக்க உத்தரவிட்டது. அப்படியிருக்கும் போது விவசாயிகள் கொள்முதல் மையங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய வாய்ப்பில்லை. ஆனால் தற்போது ஒரு கிலோ கொப்பரை விலை ரூ.100க்கும் குறைந்து விட்டது. ஆனாலும் விவசாயிகள் கொப்பரைகளை ஏன் கொள்முதல் மையங்களுக்குக் கொண்டு வருவதில்லை என்ற கேள்வி நியாயமானது தான். அதற்கான காரணங்களை பட்டியலிட முடியும்.
முதலாவதாக கொள்முதல் மையங்களுக்கு விவசாயிகள் கொப்பரைகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டும். அதற்கு ஏற்று கூலி, இறக்கு கூலி, வண்டி வாடகை என்று கிலோவுக்கு ரூ.10 வரை கூடுதல் செலவு செய்ய வேண்டும். ஆனால் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் உற்பத்திக்கூடங்களுக்கே நேரடியாக வந்து கொப்பரைகளை கொள்முதல் செய்கிறார்கள்.
அதிக அளவில் கழிக்கப்படும்
மேலும் அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதலுக்கான தரம் குறித்து அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை துல்லியமாக கடைபிடிப்பதால் அதிக அளவில் கொப்பரைகள் கழிக்கப்பட்டு விடும். ஆனால் வியாபாரிகள் பெரிய அளவில் கொப்பரைகளைக் கழிப்பதில்லை. அத்துடன் உடனடியாக கையில் பணத்தைக் கொடுத்து விடுகின்றனர். ஆனால் கொப்பரையை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்த நாளிலிருந்து பணம் விவசாயிகளின் கையில் கிடைப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை ஆகிறது.
இதனால்தான் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொப்பரைகளைக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதே நேரத்தில் வெளிச்சந்தையில் கொப்பரையின் விலை மிகவும் குறைக்கப்படாமல் இருப்பதற்கு இந்த ஆதார விலை மற்றும் கொள்முதல் மையங்கள் கைகொடுக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே கொப்பரைக்கு ஆதார விலையாக ரூ.120 நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் என்பதே தென்னை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.