புதுச்சேரிக்கு 5 அரசு பஸ்கள் நாளை முதல் இயக்கம்
வேலூர் மண்டலத்தில் இருந்து புதுச்சேரிக்கு 5 அரசு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.
வேலூர்
வேலூர் மண்டலத்தில் இருந்து புதுச்சேரிக்கு 5 அரசு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.
வேலூர் போக்குவரத்துக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த மாதம் 28-ந் தேதி முதல் சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு 300-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு 222 டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.
கடந்த 1-ந் தேதி முதல் தனியார் பஸ்களும் இயங்குகின்றன. கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு கடந்த 5-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தொற்று பரவல் குறைவு காரணமாக கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வாக நாளை (திங்கட்கிழமை) முதல் புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி வேலூரில் புதிய பஸ்நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு 3 அரசு பஸ்கள், பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருப்பத்தூரில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
இந்த 5 பஸ்களும் ஏற்கனவே சென்ற நேரத்தில் புறப்பட்டு செல்லும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.