நேரடி கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு

அன்னப்பன்பேட்டையில் சாலையோரம் நெல் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-07-11 12:26 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கோடைநெல் அறுவடை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே சாலையோரம் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். அவ்வப்போது பெய்து வரும் மழையினால் தார்பாய்கள் மூலம் நெல் குவியல்கள் மூடப்பட்டாலும், தரை வழியாக தண்ணீர் புகுந்துவிடுவதால், நெல் நனைகிறது.

இதனால் பல கிலோ நெல்மணிகள் முளைத்து வீணாகுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதை அறிந்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று அன்னப்பன்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதால் கொள்முதல் செய்ய முடியவில்லை என நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்து கொட்டி வைத்துள்ள நெல்லின் ஈரப்பதம் எவ்வளவு இருக்கிறது என ஈரப்பதம் அளவிடும் சாதனம் மூலம் பணியாளர்கள் ஆய்வு செய்தபோது, நெல்லில் 22 சதவீதம் ஈரப்பதம் இருப்பது தெரிய வந்தது. அரசு விதிகளின்படி, கொள்முதல் செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதம் வரை மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அறுவடை செய்த நெல் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் அதை காய வைத்து கொண்டு வந்தால் உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்திருப்பதை தவிர்க்க நெல்லை விரைவாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் கலெக்டர் உறுதி அளித்தார்.

ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதன்மை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்