மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

Update: 2021-07-11 06:03 GMT
லாரி மோதல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காட்டு கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ரேவந்த் சாய் (வயது 21). இவர் என்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தார்.ரேவந்த் சாய் தனது நண்பரான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மாதவன் (21) என்பவருடன் கடந்த 7-ந்தேதி திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பொன்னேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கும்மிடிப்பூண்டி நோக்கி திரும்பி கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ரேவந்த் சாய் ஓட்டிச்சென்றார்.கவரைப்பேட்டை அருகே 
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது, கும்மிடிப்பூண்டி நோக்கி அதே திசையில் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியதாக கூறப்படுகிறது.

மூளைச்சாவு
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலனின்றி வாலிபர் ரேவந்த் சாய் மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ரேவன் சாயின் உடலில் இருந்து இதயம், சிறுநீரகம் மற்றும் 2 கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்