மணப்பாறை அருகே இரண்டு இடங்களில் லாரியை வழிமறித்து டிரைவர்களை கத்தியால் குத்தி விட்டு பணம், செல்போன் கொள்ளை ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை

மணப்பாறை அருகே 2 இடங்களில் லாரியை வழிமறித்து டிரைவர்களை கத்தியால் குத்தி விட்டு பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-07-11 01:39 GMT
மணப்பாறை,
மணப்பாறை அருகே 2 இடங்களில் லாரியை வழிமறித்து டிரைவர்களை கத்தியால் குத்தி விட்டு பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழிப்பறி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆண்டவர்கோவில் அருகே குளித்தலை சாலையில் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் லாரியை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் வேறு ஏதும் லோடு கிடைக்குமா என்று அந்த பகுதியில் காத்திருந்துள்ளார். 

அப்போது அங்கு மொபட்டில் வந்த இருவர் சிவாவை பிடித்து பணம் மற்றும் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர் தடுத்துள்ளார். உடனே தான் வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து அவரின் தலையில் வெட்டியதோடு கழுத்தை அறுக்கவும் முயன்றுள்ளனர்.

கத்திக்குத்து

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவா தன்னுடைய குடும்ப சூழ்நிலையை கூறி கொள்ளையர்களிடம் கெஞ்சியதை அடுத்து ரூ.800 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். உடனே காயமடைந்த சிவா மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்நிலையில் சிறிது நேரத்தில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியை சித்தாநத்தம் அருகே வழிமறித்து அந்த டிரைவரையும் கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் காயமடைந்த டிரைவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.

ஒருவர் சிக்கினார்

இந்த சம்பவம் பற்றி மணப்பாறை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலும், கொள்ளையர்களின் தப்பிச் சென்ற மொபட் எண்ணை வைத்தும் அவர்களை தேடினார்கள். 

இதில் ஒரு கொள்ளையன் ராம்ஜி நகர் போலீஸ் பகுதியில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தப்பி சென்ற ஒருவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்