மினிலாரி மீது சரக்கு வேன் மோதல்; இளம்பெண் உள்பட 2 பேர் சாவு
நாகமங்களா அருகே மினிலாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மண்டியா: நாகமங்களா அருகே மினிலாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
2 பேர் சாவு
மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா பெல்லூர் கிராசில் ஒரு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 10 பேர் இருந்தனர். அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், தாறுமாறாக ஓடியது. அப்போது ஒரு திருப்பத்தில் வந்த மினிலாரி மீது இந்த சரக்கு வேன் மோதியது. இதில், சரக்கு வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த ஒரு இளம்பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தை பார்த்ததும் அந்தப்பகுதி மக்கள், படுகாயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
கோவிலுக்கு சென்று திரும்பியபோது...
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் கே.ஆர்.பேட்டை தாலுகா சுபாஸ் நகரை சேர்ந்த விஜயகுமார்-சுவர்ணா தம்பதியின் மகள் இம்பானா (வயது 19), யோகேஷ் (20) என்பது தெரியவந்தது.
படுகாயமடைந்தவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை.
மேலும், அந்தப்பகுதியை சேர்ந்த 10 பேர் சரக்கு வேனில் நாகமங்களா தாலுகா ஆதிசுஞ்சனகிரி அருகே உள்ள அட்டியாளம்மா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததும், திரும்பி சொந்த ஊருக்கு செல்லும்போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து பெல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.