கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடு வீடாக ஆய்வு தண்ணீர் தேங்கினால் - மாநகராட்சி அதிகாரிகள் அபராதம்
சென்னையில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் தேங்கி இருந்தால் அபராதம் விதித்து வருகின்றனர்.
சென்னை,
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் டெங்கு தடுப்பு பணிகளிலும் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுப்புழுக்கள் உருவாகாத வகையில் நீர் நிலைகளில் ‘டிரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் வீடுகளில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும் பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக தினசரி ஒவ்வொரு மண்டலத்திலும் காலை நேரங்களில் வீடு வீடாக மாநகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் தேங்க வாய்ப்பிருக்கும் இடங்களை கண்டறிந்து, உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தவும், வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்துகின்றனர். ஆய்வின்போது வீடுகளில் மழைநீர் தேங்கி கொசுபுழுக்கள் உற்பத்தியாகி இருந்தால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றவேண்டும் என வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். இந்த தேவையற்ற பொருட்களை சேகரித்து மாநகராட்சி மறுசுழற்சி மையத்துக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறோம்.
கொசுப்புழுக்கள் வளர காரணமாக அமையும் இடங்களில் அதன் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரையிலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், சிறிய கடைகளுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், நட்சத்திர ஓட்டல்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள்தான் ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.