கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கேரளாவில் பாதிப்பு அதிகம்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3-வது நிலை ஏற்பட்டால் மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மற்றும் ‘ஜிகா வைரஸ்’ பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரெயில் பயணிகள்
இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். குறிப்பாக கேரளாவில் இருந்து ரெயிலில் வருகிற பயணிகளுக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கேரளாவில் இருந்து நெல்லைக்கு தினமும் குருவாயூர், அனந்தபுரி, பாலருவி, இன்டர்சிட்டி, புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட பல்வேறு ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரெயில்கள் மூலம் ஏராளமானோர் நெல்லை மாவட்டத்தில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கொரோனா பரிசோதனை
கலெக்டர் உத்தரவுப்படி மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு சென்றனர். அங்கு முகாம் அமைத்து கேரளா ரெயில்களில் வந்த பயணிகளுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் வெப்ப நிலை அதிகமாக இருந்த பயணிகளுக்கு அங்கேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் பற்றிய தகவல்களும் பதிவு செய்யப்பட்டது. கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் குறையும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.