நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

Update: 2021-07-10 18:39 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 371 கர்ப்பிணிகள் மற்றும் 234 பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் கொரோனா தடுப்பூசி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி முன்னிலையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 27 இடங்களில் 371 கர்ப்பிணிகள் மற்றும் 234 பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:- தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதல்படி டாக்டர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் முதலாவதாக தடுப்பூசி போடப்பட்டது.
கர்ப்பிணிகள்
அதைத்தொடர்ந்து சுகாதார பணியாளர்கள், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
மேலும் தேசிய சுகாதார இயக்ககம் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் பரிந்துரையின்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டு கடந்த 2 வாரங்களாக 2,356 பிரசவித்த தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 371 கர்ப்பிணிகள் மற்றும் 234 பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 137 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்